இதுவரை மொபைல் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்காத வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ம் தேதி முதல் மொபைல்போன் பயன்படுத்துவோர் ஓடிபி (OTP) மூலம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதே சமயம், மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 6 ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் கால கெடு முடிந்த பிறகு மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்காத வாடிக்கையாளர்களின் சிரமங்களை தவிர்க்கவும், கடைசி நேர குழப்பங்களை தவிர்க்கவும் ஓடிபி மூலம் இணைக்கும் வசதியை செய்து வர அரசு முடிவு செய்துள்ளது. மொபைல் கம்பெனிகளில் சில சமயங்களில் பயோ மெட்ரிக் இயந்திரம் வேலை செய்யாமல் இருக்கலாம். மொபைல் சேவை மையங்கள் தூரமாக இருக்கலாம். இது போன்ற மக்களின் சிரமங்களை தவிர்க்க இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓடிபி முறையில், வாடிக்கையாளர்கள் ஐவிஆர்எஸ் (Interactive Voice Response System -IVRS)க்கு தங்கள் மொபைலில் இருந்து கால் செய்ய வேண்டும். அதில் ஆங்கிலம், இந்தி அல்லது பிராந்திய மொழிகளை தேர்வு செய்து, ஆதார் நம்பர் இணைப்பதற்கான எண்ணை அழுத்த வேண்டும். உடனடியாக வாடிக்கையாளரிடம் ஆதார் எண் கேட்கப்படும். பின்னர் மொபைலுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி.,யை பதிவு செய்த உடன், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களின் மொபைல் எண் சரிபார்க்கப்பட்டு, ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்படும்.