ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் வாங்கியவுடன், நாம் விரும்பும் செட்டிங்ஸ் வகைகளை அமைத்து உடன் இயக்கத் தொடங்குகிறோம். சில வசதிகளுக்கு, நண்பர்களை நாடுகிறோம். ஆனால், பெரும்பாலானவர்கள், போனுடன் வரும் ‘மேனுவல்’ என்னும் இயக்கக் குறிப்புகள் அடங்கிய சிறு நூலைப் படிப்பதில்லை. எளிதாகப் படிக்கும் வகையில், அவை பெரிய எழுத்துக்களில் இல்லாமல், பக்கங்களைக் குறைத்துத் தர வேண்டும் என்ற இலக்குடன் சிறிய எழுத்துகளில், ஏதோ பெயருக்குத் தரப்படுவதாக இருப்பதுவும் ஒரு வழக்கமாக உள்ளது.
இங்கு அத்தகைய குறிப்பு நூல்களில் கூடத் தரப்படாத, நமக்கு அதிகம் பயன்தரக் கூடிய சில அமைப்பு குறிப்புகளைப் பார்ப்போம்.
அறிவிப்புகளை உடனே அறிய :-
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், நாம் அடிக்கடி சந்திப்பது, ‘நோட்டிபிகேஷன்’ எனப்படும் அறிவிப்புகளைத்தான். நாம் பல அப்ளிகேஷன் புரோகிராம்களைப் போனில் பதிந்திருப்போம். அவற்றின் சார்பாகப்பல அறிவிப்புகள் நமக்கு வந்து கொண்டே இருக்கும். போன் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களில், இவை நமக்கு எரிச்சல் ஊட்டுவனவாக அமையும். இந்த அறிவிப்புகள் உள்ள பட்டியலில், ஏதேனும் ஒரு அறிவிப்பின் மேல் தட்டி, அப்படியே அழுத்தவும். குறிப்பிட்ட செயலிக்கான செட்டிங் ஐகான் காட்டப்படும். இதனை மீண்டும் தட்டினால், அறிவிப்பு சார்ந்த செட்டிங்ஸ் அமைப்பு காட்டப்படும். இங்கு அறிவிப்புகள் காட்டப்படுவதில், நாம் விரும்பும் வகையில் அமைக்கலாம். அல்லது மொத்தமாக, அவற்றைப் பெறாத வகையில் அமைத்துவிடலாம்.
டெக்ஸ்ட் தோற்றம்
போனில் கிடைக்கும் டெக்ஸ்ட் வரிகளைப் படிப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கும். குறிப்பாக, வயதானவர்களுக்கு, பார்வைத் திறனில் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படும். மேலும், கிரே வண்ணத்தில், டெக்ஸ்ட் இருந்தால், அவை அதன் பின்னணியுடன் இணைந்து தெளிவாகப் படிக்கும் வகையில் இருக்காது. இதனை high contrast என்னும் முறையில் மாற்றி அமைக்கலாம். இதற்கு Settings > Accessibility என்ற முறையில் செல்லவும். அங்கு டெக்ஸ்ட் அதிக வேறுபாட்டுடன் காட்டப்படும் வகைக்கான செட்டிங்ஸ் அமைப்பு கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டை, தெளிவாகவும், எளிதாகப் படிக்கும் வகையிலும் அமைக்கலாம்.
போனுக்கான பூட்டு
பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்மார்ட் போன் ஒன்றில், அதற்கான பாதுகாப்பு பூட்டு ஒன்றைப் போடவேண்டும். இதனை lockscreen password கொண்டு அமைக்கலாம். இதனை இயக்கிவிட்டால், போனை பாஸ்வேர்ட் போடாமல் பயன்படுத்த முடியாது. நாம் பயன்படுத்த வேண்டும் என விரும்பினாலும், வீட்டில் உள்ளோர் பயன்படுத்த விரும்பினாலும், அதற்கான பாஸ்வேர்டை அமைக்க வேண்டும். இல்லை எனில் இயங்காது.
ஒவ்வொரு முறை பாஸ்வேர்டை அமைக்க வேண்டும், அதனையும் சரியாக அமைக்க வேண்டும் என்பது, அந்த போனின் உரிமையாளருக்கே சில வேளைகளில், ஏன், பல வேளைகளில் எரிச்சலைத் தரும் நிகழ்வாக அமையும். நாம் கூட எண்ணலாம்; “வீட்டில் இருக்கும்போது எதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு. தேவை இல்லையே. குறைந்த பட்சம் வீட்டில் இருக்கும்போதாவது, இந்த பாஸ்வேர்ட் போடும் வேலை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே” என்று நினைக்கலாம்.
இதற்கான வழியை, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தருகிறது. உங்கள் வீடு நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடம்; இங்கு போன் இயங்குகையில், பாஸ்வேர்ட் தேவை இல்லை என போனுக்குச் சொல்லலாம். இதற்கு security > Smart Lock எனச் சென்று, உங்கள் வீடு உள்ள இடத்தினை, நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடமாக அமைத்துவிடுங்கள். அல்லது, ஸ்பீக்கர் போன்ற புளுடூத் இணைப்பில் இயங்கும் சாதனம் ஒன்றுக்கு இணைப்பினை ஏற்படுத்திவிடுங்கள். இதனை ஏற்படுத்திவிட்டால், உங்கள் போன், நீங்கள் வீட்டில் உள்ளீர்கள் அல்லது போனுடன் இணைக்கப்பட்டுள்ள புளுடூத் சாதனம் நம்பிக்கையானது என்று உணர்ந்து, அதனை இயக்க பாஸ்வேர்ட் கேட்காது. மற்ற இடங்களுக்குப் போனை எடுத்துச் செல்கையில், நிச்சயம் கேட்கும்.
ஸ்விட்ச் ஆப் செய்த போனைக் கண்டறிய
இந்த நிலை, ஆண்ட்ராய்ட் போன் அல்லது எந்த ஒரு மொபைல் போன் பயன்படுத்துபவருக்கும் ஏற்படும் நிகழ்வாகும். நம் பேட்டரி சக்தி காலியாகி அல்லது நாமே ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிடுவோம். அப்போது போனை எங்கு வைத்தோம் என்று கண்டறிவது சிரமம். ஏனென்றால், இன்னொரு போனில் இருந்து அதனை அழைத்தாலும், அதன் ரிங்கர் ஒலிக்காமல் இருப்பதால், அது இருக்கும் இடத்தை அறிய முடியாது. ஸ்மார்ட் போனுக்கான ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இதற்கு இன்னொரு வழி உள்ளது. இணையத்துடன் இணைக்கப்பட்ட போன் அல்லது கம்ப்யூட்டரில் http:android.com/ என்ற இணைய தளப்பக்கம் செல்லவும். கூகுள் ஐ.டி.மூலம் லாக் இன் செய்திடவும். அங்கு உங்கள் போன் குறித்த தகவலைத் தரவும். இப்போது, உங்கள் போன் எங்குள்ளது என்று மேப்பில் காட்டப்படும். ஆனால், வீடு உள்ள ஊர் தான் காட்டப்படுமே ஒழிய, போன் சரியாக எங்குள்ளது என்று தெரியாது. அதிலேயே, நல்ல ஒலியுடன் சிக்னல் கொடுக்க வழி தரப்பட்டிருக்கும். அதனை அழுத்தினால், போன் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும், போன் ஒலிக்கும்.
அழைப்பினை மறுத்து எஸ்.எம்.எஸ். :
நாம் முக்கிய பணியில் இருக்கையில், ஏதேனும் அழைப்பு வந்தால், அது குறித்து எஸ்.எம்.எஸ்.அனுப்பி, பணியைத் தொடரலாம். இதற்கென நாம் சந்திக்கக் கூடிய சூழ்நிலைகள் சார்ந்த எஸ்.எம்.எஸ். செய்திகள் பல, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளன. இவற்றை நாம் எடிட் செய்தும் வைத்துக் கொள்ளலாம். அல்லது நீக்கவும் செய்திடலாம்.இதற்கு Settings > Phone எனச் சென்று, dialer திறந்து, போன் செட்டிங்ஸ் செல்லவும். இதில் கிடைக்கும் மெனுவில் Reject with SMS என்ற ஆப்ஷன் கிடைக்கும். இதில் உள்ள எஸ்.எம்.எஸ். செய்திகளை, நாம் எடிட் செய்திடலாம்; அல்லது நீக்கலாம்.
தானாக உருவாகும் ஷார்ட் கட் ஐகான்களை நீக்க:
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, ஒவ்வொரு முறை செயலி ஒன்றைப் பதியும் போது, ஷார்ட் கட் ஐகான் ஒன்று உங்கள் திரையில் காட்டப்படும் வகையில் அமைக்கப்படும். இவ்வாறு ஷார்ட் கட் ஐகான் அமைப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லை எனில், பிளே ஸ்டோர் செல்லவும். அதில் இடதுபுறம் மேலாக உள்ள மூன்று சிறிய கோடுகள் அடங்கிய ஐகானில் கிளிக் செய்து செட்டிங்ஸ் திறக்கவும். இங்கு ‘Add icon to Home Screen’ என்ற ஒரு ஆப்ஷன் இருப்பதைக் காணலாம். இதன் அருகே உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டால், தானாக ஷார்ட் கட் அமைக்கப்படாது.
பயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDeleteVery Useful Posts friend . Thank you bestandroidtrainingchennai.in
ReplyDeletevery useful nanbaa
ReplyDelete