தி.மு.க.,வில், மாவட்ட நிர்வாகிகளை சென்னை, அறிவாலயத்துக்கு வரவழைத்து கூட்டம் நடத்தி இருக்கும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், கூட்டத்தின் ஒரு பகுதியாக, பெட்டி ஒன்றை வைத்து, புகார்களை பெற்றார்.
அந்தப் புகார்களில் குறிப்பாக சொல்லப்பட்டிருந்த விஷயம், 'கீழ் நிலை நிர்வாகிகள் கூட, இரு பதவிகளை வைத்துள்ளனர். ஒரே இடத்தில் அதிகாரம் குவிகிறது. பதவியில்லாமல் கட்சிக்கு பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகம். பதவி நிரவல் வேண்டும். இதை தலைமை உடனடியாக செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் தி.மு.க., நிர்வாகிகளிடம் இருக்கும் இரு பதவிகளில் ஒன்றை, உடனடியாக ஆங்காங்கே இருக்கும் மாவட்ட தலைமையிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், 'கட்சியின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் பதவியையும் வைத்திருக்கிறார். இதனால், இரண்டில் ஒரு பதவியை அவர் ஒப்படைத்து, அந்தப் பதவியை புதியவர் ஒருவருக்கு ஒப்படைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
'செயல் தலைவர் பதவி என்பது நிரந்தரப் பதவி அல்ல; அது தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாத சூழலில் கட்சியை விரைந்து நடந்த தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. தலைவர் கருணாநிதி மீண்டும் நன்றாக செயல்படக் கூடிய நிலை உருவானால், செயல் தலைவர் பதவி இல்லாமல் போகும். அதனால், செயல் தலைவர் பதவியையும் குறிப்பிட்டு, பொருளாளராக இருக்கும் ஸ்டாலினை, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல' என்று ஸ்டாலின் தரப்பினர் சொல்கின்றனர்.