ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வாரத்தில் பதிலளிக்க டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் தன் சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏர்செல் நெட்வொர்க்கின் சிக்னல் முழுமையாகத் தடைப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். படிப்படியாக ஏர்செல் வாடிக்கையாளர் வேறு நெட்வொர்க் சேவைக்கு மாறத் தொடங்கிவிட்டனர். இதனிடையே தன் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் விண்ணப்பித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் இன்று பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘தமிழகத்தில் நடப்பில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் முழுமையாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ளும் எம்.என்.பி வசதியைப் பெறும்வரை ஏர்செல் சேவை நீட்டிக்கப்பட வேண்டும். ஏர்செல் சேவையை நீட்டிக்க அந்நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’ என மத்தியத் தொலைத்தொடர்புத் துறை, ஏர்செல் நிறுவனம் மற்றும் தேசியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.