மின் வாரியம், 'பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்' என்ற சேவையின் கீழ், மின் கட்டணம் செலுத்தும் வசதியை துவக்கியுள்ளது.
இது குறித்து, மின் வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:மின் கட்டண மையம், வங்கி கிளைகள், மின் வாரியத்தின், 'மொபைல் ஆப்' செயலி, அரசு, 'இ - சேவை' மையங்கள் மற்றும், தபால் நிலையங்களில், மின் கட்டணம் செலுத்தலாம்.
ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் ஆகியவை இணைந்து, பி.பி.பி.எஸ்., எனப்படும், 'பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்' என்ற சேவையை துவக்கியுள்ளன.எந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்றாலும், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் என்ற பகுதி இருக்கும். அதில், நுழைந்தால், 'டான்ஜெட்கோ' இருப்பதை காண்பிக்கும்.
அதன் வாயிலாக, நாளை முதல் மின் கட்டணம் செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியுள்ளது. அதில், எந்த நேரத்திலும், எங்கிருந்தும் மின் கட்டணம் செலுத்தலாம்.மின் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகையை கண்டறிந்து, பணம் செலுத்தலாம். இந்த முறையில், இணையதளம் வாயிலாக, மின் கட்டணம் செலுத்த, கட்டணம் ஏதும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது