ரயில்வே துறையில், 89 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சலுகை
இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே துறையில், 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியிடங்களில், 89 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அமைச்சர் கோயல், தெரிவித்துள்ளதாவது:ரயில்வேயில், 'டி' பிரிவு ஊழியர்களாக, டிராக் மேன், ஸ்விட்ச் மேன், போர்ட்டர், ஹெல்பர் உள்ளிட்ட, 62 ஆயிரத்து, 907 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
அதே போல், 'சி' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீசியன்களாக, 26 ஆயிரத்து,502 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம், 18 ஆயிரம் ரூபாயாக இருக்கும். மத்திய அரசின், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, அனைத்து சலுகைகளும் பெறுவர்.
பயிற்சி
குறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது, ஐ.டி.ஐ., படித்த, 18 - 31 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு விட்டன. இது தவிர, 30 ஆயிரம் பேருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.