அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

14 February 2018

மலிவு விலையில் அறிமுகமான ஜியோபோனில் பேஸ்புக் வசதி

ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு புதிய பேஸ்புக் இன்று கிடைக்கும். இதற்கான பிரத்யேக ஆப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் அதிவேக 4ஜி சேவை கிடைக்கும் வகையில் 1,500க்கு 4ஜி வசதியுள்ள சாதாரண போன்களை, ஜியோ போன் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மொபைலுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. சாதாரண போனாக இருந்தாலும் வீடியோ பார்க்கும் வசதி, அதிவேக இணைய வசதி இதில் கிடைக்கும். இதுதவிர, இந்த வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா குரல் அழைப்பு சலுகைகளையும் ஜியோ வழங்கியிருந்தது. 

ஜியோ போன் அறிமுகம் செய்யும்போதே இதில் பேஸ்புக் வசதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் இந்த விருப்பத்தை ஜியோ பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:ஜியோபோன் உலகிலேயே மிகுந்த மலிவு விலையில் அளிக்கப்படும் மொபைல் போன். இதில் இந்தியர்களுக்கு அதிநவீன வசதி கிடைக்க வகை செய்யப்படுகிறது. குறிப்பாக சாதாரண போன் பயன்படுத்துவோர் பேஸ்புக் உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதை செயல்படுத்தும் வகையில் நாளை முதல் (இன்று) ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் வசதி கிடைக்கும்.

ஜியோ கய்ஓஎஸ்க்கு ஏற்ற பேஸ்புக் புதிய ஆப் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாதாரண போன் பயன்படுத்தும் 50 கோடி சந்தாதாரர்கள் பயன்படுவார்கள். இந்த ஆப்சில் வீடியோ, புஷ் நோட்டிபிகேஷன் போன்ற வசதிகளும் இருக்கும் என ஜியோ நிறுவன இயக்குநர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதுபோல் பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் பிரான்சிஸ்கோ வெரேலா கூறுகையில், ஜியோ போன் பயன்படுத்துவோருக்கு இந்த வசதியை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.